thumbnail

டைவர்ஜன்சஸ் இன்டிகேட்டர்கள்-Divergence Indicators



26. டைவர்ஜன்சஸ் இன்டிகேட்டர்கள்

இந்த இண்டிக்கேட்டர்கள் பற்றி தெரிந்துக் கொள்ளும் முன், டைவர்ஜன்சஸ் (Divergence) என்றால் என்னவென்று முதலில் பார்ப்போம். 

தொடக்கம், அதிகபட்சம், குறைந்தபட்சம், முடிவு, வர்த்தக அளவு என பங்கின் விலை அல்லது பங்குச் சந்தை புள்ளிகள் மூலம் நாள்தோறும் கிடைக்கிறது. 

‘இண்ட்ரா டே’ என்கிற நாள் வர்த்தகம் என்கிற போது ஒவ்வொரு வினாடியும் நமக்கு ‘டேட்டா’ என்கிற விலை விபரங்கள் கிடைக்கின்றன. இந்த விலை விபரங்களில் இருந்து பல்வேறு வகையான புள்ளி விவர கணக்கீடுகள்(Statistical Calculations) மூலம் வெவ்வேறு வகையான இண்டிகேட்டர்களும் (Indicators)ஆசிலேட்டர்களும் (Oscillators) கணக்கிடப்படுகின்றன.

விலை எந்த திசையில் செல்கிறதோ, அதே போக்கில்தான் இந்த இண்டிகேட்டர்கள் மற்றும் ஆசிலேட்டர்கள் செல்ல வேண்டும். அதை விட்டு விட்டு இண்டிகேட்டர் மற்றும் ஆசிலேட்டர்கள் வேறு திசையில் சென்றால், விலையும் கூடிய சீக்கிரத்தில் இந்த இண்டிகேட்டர் மற்றும் ஆசிலேட்டர்கள் செல்லும் திசையில் செல்லத் தொடங்கும். இந்த நிலைதான் டைவர்ஜன்சஸ்..! 

டைவர்ஜன்சஸ் என்பது இரு வகைப்படும்.

பாசிடிவ் டைவர்ஜன்சஸ்: 
பங்கின் விலை கீழ் நோக்கி இறங்கிக் கொண்டிருக்கும் நிலையிலோ அல்லது சமமான குறைந்தபட்ச  விலையிலே ஊசலாடிக் கொண்டிருக்கும் போதோ இண்டிகேட்டர்களும், ஆசிலேட்டர்களும் மேலே செல்வது, பாசிடிவ் டைவர்ஜன்சஸ். 

நெகட்டிவ் டைவர்ஜன்ஸ்: 
விலை மேல் நோக்கி ஏறிக் கொண்டிருக்கும் நிலையிலோ அல்லது சமமான அதிகபட்ச விலையிலேயே ஊசலாடிக் உலாவிக் கொண்டிருக்கும் போதோ, இண்டிகேட்டர்களும், ஆசிலேட்டர்களும் கீழே செல்வது, நெகடிவ் டைவர்ஜன்சஸ். . 

டைவர்ஜன்சஸ் இண்டிகேட்டர் என்கிற போது ஆர்.எஸ்.ஐ.(RSI- Relative Strength Index ), எம்.ஏ.சி.டி(MACD-Moving Average Convergence Divergence)போன்றவை மிக முக்கியமானவை.

அவை பற்றிய விரிவான விளக்கம் வருமாறு: 

பொதுவாக, ஆர்.எஸ்.ஐ. 70-க்கு மேல் மற்றும் 30-க்கு கீழ் என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. சிலர் 80 மற்றும் 20 என்பது போல் கூட கணக்கீட்டை வைத்துக்கொள்வார்கள். இது கிட்டத்தட்ட ஒரு சார்ட் அமைப்பு போல் இருக்கும். இந்த ஆர்.எஸ்.ஐ. 70-க்கு மேல் அல்லது 30-க்கு கீழ் சென்றால் சந்தை அதன் போக்கை மாற்றிக் கொள்ளப் போகிறது என்று பொருள். அப்போது முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாகி விட வேண்டும். அதற்காக ஆர்.எஸ்.ஐ. 70-க்கு மேல் அல்லது 30-க்கு கீழ் சென்றவுடன் விற்கவோ, வாங்கவோ கூடாது. இது மிகவும் நின்று நிதானித்துச் செயல்பட வேண்டிய நேரம். 
அதாவது, பங்கின் விலை அதிகரித்து வரும் நிலையில், அதற்கு மாறாக ஆர்.எஸ்.ஐ. குறைந்து 30-க்கு கீழ் வந்தால் பங்கின் விலை அதன் போக்கை மாற்றிக்கொள்ளப் போகிறது என்று பொருள். பங்கின் விலை குறைந்துவரும் நிலையில், ஆர்.எஸ்.ஐ. 70-ஐ தாண்டினால் பங்கு அதன் போக்கை மாற்றிக்கொள்ளப் போகிறது என்று பொருள். 

எப்படி முடிவு எடுப்பது?
ஆர்.எஸ்.ஐ. இண்டிகேட்டர் அடிப்படையில் எப்படி செயல்பட வேண்டும் என்று பார்ப்போம். 

* முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் பங்கின் விலையோடு ஆர்.எஸ்.ஐ. இண்டிகேட்டரையும் கவனித்து வாங்கி, விற்றால் நிச்சய லாபத்தைப் பார்க்கமுடியும். ஆர்.எஸ்.ஐ. 70 என்றால் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட பங்கு. 70-க்கு மேல் சென்றால் பங்கை வாங்கக்கூடாது. 70-ஐ தாண்டிவிட்டு கீழே இறங்கினால், அந்தப் பங்கை விற்கலாம்.

* ஆர்.எஸ்.ஐ. 30 என்றால் குறைந்த விலை கொடுத்து வாங்கிய பங்கு. 30-க்கு கீழ் இருந்தால் அந்தப் பங்கை விற்கக்கூடாது. 30-க்கு கீழ் இறங்கி மேலே சென்றால் வாங்கவேண்டும். 


No Comments