thumbnail

டெக்னிக்கல் அனாலிசிஸ்-1

அடிப்படை ஆய்வின் அவசியம்..!
பங்குச் சந்தையில் லாபம் சம்பாதிக்க இரு முறைகள் இருக்கின்றன. அவற்றில் மிகப் பழமையானது அடிப்படை ஆய்வு என்கிற  ஃபண்டமென்டல் அனாலிசிஸ் (Fundamental Analysis). அடுத்த முறை, டெக்னிக்கல் அனாலிசிஸ் (Technical Analysis) என்கிற தொழில்நுட்ப பகுபாய்வு.

பொதுவாக, பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள், நிறுவனங்கள் பற்றிய பல அடிப்படை விஷயங்களை ஆராய்ந்துதான் முடிவு எடுப்பார்கள்.

அந்த நிறுவனம் கடந்த காலங்களில் எப்படிச் செயல்பட்டிருக்கிறது, அந்த நிறுவனம் சார்ந்த துறைக்கு எந்த அளவுக்கு எதிர்கால வளர்ச்சி இருக்கிறது, அந்த நிறுவனத்துக்கு புதிதாக எவ்வளவு ஆர்டர் கிடைத்திருக்கிறது என்பது போன்ற விசயங்களை அலசி ஆராய்வார்கள்.

ஃபண்டமென்டல் அனாலிசிஸ் முறையில் வேறு என்ன விசயங்கள் அலசப்படும் என்கிற பட்டியல் இதோ..!

* நிறுவனத்தின் மொத்த பங்கு மூலதனம் (Equity Capital)

* பங்கு மூலதனத்தில் நிறுவனர்கள், அந்நிய நிதி நிறுவனங்கள், உள்ளாட்டு நிதி நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்கள், பொது மக்களின் பங்கு.

* குறைந்தது கடந்த ஐந்தாண்டுகளில் நிறுவனத்தின் லாப& நடடம் விவரம்

* குறைந்தது கடந்த 2&3 காலாண்டுகளில் நிறுவனத்தின் நிதி நிலை விவரம்

* முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து சிறப்பாக ஈவுத்தொகை (டிவிடெண்ட்) கொடுத்திருக்கிறதா?

* விரிவாக்க திட்டங்கள்

* ஒரு பங்கு வருமானம் (இ.பி.எஸ்.), நிறுவனத்தின் மதிப்பு உள்ளிட்டவை

* குறிப்பிட்ட நிறுவனம் மற்றும் அது சார்ந்த துறை பொருளாதாரம் மற்றும் அரசியல் சிக்கலுக்குள் மாட்டிக் கொள்ள வாய்ப்பிருக்கிறதா?

என்பது போன்ற பல்வேறு விசயங்களையும் அலசி ஆராய்ந்து, அதன் அடிப்படையில் தற்போதைய விலை சரியானதுதானா என முடிவெடுத்து பங்குகளை வாங்கவோ, விற்கவோ செய்வதுதான் ஃபண்டமென்டல் அனாலிசிஸ்.



பெட்டி செய்தி
பங்கு முதலீட்டில் எப்படி லாபம் பார்க்கிறார்கள்?
பங்குகளை பொறுத்த வரையில் ஒருவர் விற்கிறார், ஒருவர் வாங்குகிறார். இதில் விற்றவருக்கு நஷ்டமா? இல்லை லாபமா? என்றால், அவர் என்ன விலைக்கு வாங்கி இருக்கிறார்? என்ன விலைக்கு விற்றிருக்கிறா என்பதை பொறுத்துதான் இருக்கிறது.

உதாரணத்துக்கு ஒருவர் ஒரு பங்கை 100 ரூபாய்க்கு வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதன் விலை 130 ரூபாய்க்கு அதிகரித்து செல்கிறது. பிறகு 125 ரூபாய்க்கு இறங்குகிறது. பங்கின் விலை இன்னும் கீழே இறங்கும் என்று நினைக்கும் அவர், பங்கை விற்க முடிவு செய்கிறார். அதே நேரத்தில், இந்த பங்கின் விலை 150 ரூபாய்க்கு மேலே செல்ல வாய்ப்பு இருக்கிறது என்று இன்னோருவர் நினைக்கிறார் என்றால் அவர் அந்த பங்கை வாங்குவார். அப்படி நடக்கும்பட்சத்தில் விற்றவருக்கு 25 ரூபாய் லாபம். பங்கின் விலை 150 ரூபாய்க்கு செல்லும் போது வாங்கியவர் விற்கிறார் என்றால் அவருக்கு 25 ரூபாய் லாபம். இதே போல் ஒருவர் வாங்கி இன்னொருவர் விற்க லாபம் என்பது தொடர்ந்து கொண்டிருக்கும். அதே நேரத்தில் நல்ல பாரம்பரியமான நிறுவனப் பங்கை வாங்கினால் மட்டுமே இந்த லாபம் கிடைக்கும் என்பதால் பங்குகளை தேர்ந்தெடுக்கும் போது முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மிகவும் எச்சரிகையாக இருப்பது அவசியம்.

No Comments